மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது மனைவி அனுராதாவுடன் சென்று கோ- பூஜை, கஜ பூஜை செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்பாளின் அனுகிரகத்தை பெறுவதற்காக வந்து பூஜைகள் செய்தேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை. கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு அது பற்றி கூறுகிறேன். நானும் ஓ.பி.எஸ்.ம் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்படுவது என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளோம். எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது. எனவே வீண் வதந்திகளை நம்பாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.