அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- செல்வப்பெருந்தகையின் கருத்துக்களை பார்த்தால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலையில் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. அதற்காக நாங்கள் யாரையும் எங்கள் கூட்டணிக்கு வருமாறு கெஞ்சவில்லை. எங்களுக்கு பயந்தே தி.மு.க. தங்கள் கூட்டணியில் அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. உடனே ஒப்பந்தம் செய்து, உடனே கையெழுத்து போட்டு தொகுதி உடன்பாட்டை வெளியிடுகிறார்கள்.

இதில் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்னவென்றால் அவர்களை விட்டால் அ.தி.மு.க.வுக்கு வந்து விடுவார்கள் என்பதால்தான். எனவே எங்களுக்கு பயந்தே தொகுதி பங்கீட்டை அவசர அவசரமாக முடிக்கிறார்கள். இதனால் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படுமா? அதற்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும். யார்-யார் எந்தெந்த கூட்டணிக்கு செல்வார்கள் என்பது இன்னும் 10 நாளில் தெரியும்.

அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் சேர கட்சிகள் தயாராக உள்ளன. ஆனால் எந்தெந்த கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேரும் என்பதை இந்த நேரத்தில் சொல்வது சரியாக இருக்காது. எங்கள் தலைமையிலான கூட்டணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பது நிச்சயமாக இன்னும் 10 நாளில் தெரியும். தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அதை பொதுச்செயலாளர் அறிவிப்பார். தி.மு.க. அரசு எங்களுக்கு பிடிக்காத அரசு. தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசு. தற்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. வண்டலூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கே பாதுகாப்பு இல்லை. அவர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் போதை, வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து விட்டது.

மத்தியில் யானை பசிக்கு சோளப்பொரி போல தமிழ்நாட்டுக்கு நிதி அளிக்கிறது. தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது. ஆனால் வடமாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி கொடுக்கிறது. மத்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிறது. மத்திய அரசு வரிப்பகிர்வு  என்பதை அனைத்து மாநிலங்களுக்கும் சீராக வழங்க வேண்டும். போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய ஜாபர்சாதிக் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாபர் சாதிக்கை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal