அ.தி.மு.க.விலும் சரி, பா.ஜ.க.விலும் சரி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி.தினகரனும் தற்போது மனம் மாறியிருப்பதாக முக்கிய தகவல் ஒன்று உலா வருகிறது.

இது பற்றி ஓ.பன்னீர் மற்றும் டி.டி.வி. தரப்பிற்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

‘‘சார், அ.தி.மு.க.வில் தங்களுக்கான முக்கிய அதிகாரத்தை பெற்றுவிட வேண்டும் என ஓ.பன்னீரும், டி.டி.வி.தினகரனும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அது பலன் அளிக்கவில்லை. ‘அ.தி.மு.க.வில் அணைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி உண்டு’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ ‘துரோகிகளுக்கு’ இடமில்லை என்று கூறி, அவரது கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறார்.

அ.தி.மு.க.விற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்குகளும் அவருக்கு பின்னடைவை கொடுத்தது. தற்போது, அ.தி.மு.க. வேஷ்டி, கொடி, சின்னத்தைக் கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் ஓ.பன்னீர். டி.டி.வி.யோ, ‘அ.தி.மு.க.வை மீட்கிறேன்’ எனக்கூறி அ.ம.மு.க.வை ஆரம்பித்தார். அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் தாய்க்கழகமான அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர்.

இந்த நிலையில்தான், பி.ஜே.பி.யின் ஆதரவு நிலைப்பாட்டை ஓ.பி.எஸ்.ஸும், டி.டி.வி.யும் தொடர்ந்து எடுத்து வந்தனர். ஆனால், பி.ஜே.பி.யும் கண்டுகொள்ளவில்லை. பாரிவேந்தர், தேவநாதன், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் ஆகியோருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீருக்கு கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் ஓ.பன்னீரும், டி.டி.வி.யும் மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்’’ என்றவர்கள்,

அடுத்து சொன்னதுதான் அதிர்ச்சி ரகம், ‘‘அ.தி.மு.க.விற்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தது. எடப்பாடியார் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திவிட்டு, பிறகு அ.தி.மு.க.வில் இணைந்து ‘பசை’யுள்ள துறையை பெற்றார் ஓ.பன்னீர். அதன்பிறகு அ.தி.மு.க.வைப் பற்றி விமர்சனம் செய்யவில்லை.

இந்த நிலையில்தான், இனி அ.தி.மு.க.விற்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் எந்த விமர்சனத்தையும் வைக்கவேண்டாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம். அதன் பிறகாவது எடப்பாடி பழனிசாமி மனம் மாறி தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு ஓ.பன்னீரும், டி.டி.வி.யும் ஆதரவு கொடுக்க தயாராகி வருகிறார்களாம்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal