கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் சென்னை மெரினாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.

காங்கிரஸ் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று சில மூத்த கதர்களிடம் பேசினோம்.

‘‘சார், கடந்த தேர்தலின்போது, எடுத்த எடுப்பிலேயே 10 சீட்டுக்களை லட்டு போல காங்கிரசுக்கு அள்ளி தந்தது திமுக. ஆனால், இந்த முறை அவ்வளவு சீட் தர வாய்ப்பில்லை என அறிவாலயம் தரப்பு திட்டவட்டமாக இருக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக செல்வப் பெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரும், இரட்டை இலக்கத்தில் எப்படியாவது சீட் வாங்கி தலைமையிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என முயற்சித்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழலில்தான், கலைஞரின் நினைவிடம் நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துதான், நமக்கு சில பிரத்யேகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவில், கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட திமுகவின் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனாலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

அதைவிடக் கொடுமை, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் யாருமே விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதுதான் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டி உள்ளது. தமிழகத்தில் காங்கிரசுக்கு மொத்தம் 8 எம்.பி.க்கள் இருக்கின்றனர். 8 எம்.பி.க்களும் கலந்து கொள்வதாக இருந்ததாம். ஆனால், விழாவுக்கு முதல் நாள் எம்.பி.க்களை தொடர்புகொண்டு, “விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் ” என்று காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டதாம். அதனால்தான் எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லையாம்.

அதேபோல, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் விழாவுக்கு போகக்கூடாது என்பதால் தான், தொகுதிகள் குறித்து விவாதிக்கிறோம் என்ற பேரில் செல்வத்தையும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமாரையும் டெல்லிக்கு வரவழைத்து விட்டது காங்கிரஸ் மேலிடம். அதாவது சீட் எண்ணிக்கை, தொகுதிகள் முடிவு செய்வது உள்ளிட்ட விவகாரங்களில் எங்களுக்கு திமுக மீது அதிருப்தியிருப்பதாக காட்டுவதற்காகவே இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால், இருவரும் கலந்துகொள்ளவில்லை. ஆக, திமுக மீது காங்கிரஸ் கோபமாக இருக்கிறது.

காங்கிரஸை தவிர்த்துவிட்டு திமுகவால் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை. தேசிய அளவிலும் காங்கிரசின் தயவு திமுகவுக்கு தேவையாக இருக்கிறது. அத்துடன், சிறுபான்மையினர் ஓட்டுக்களை குறி வைத்து எடப்பாடி பழனிசாமி தீயாய் காய்நகர்த்தி வரும்நிலையில், அந்த சிறுபான்மையினர் ஓட்டுக்களையும் திமுக தக்க வைக்க வேண்டி உள்ளது. அதுமட்டுமல்ல, அதிமுகவில் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. திமுக கூட்டணி எப்போது இறுதியாகும்? யாராவது திமுகவுடன் அதிருப்தி ஏற்பட்டு, அங்கிருந்து கூட்டணியை முறித்து கொண்டு வெளியே வருவார்களா? என்று “துண்டு” போட்டு காத்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.’’ என அ.தி.மு.க.வை இன்னும் ஒரு சாய்ஸாக வைத்துக்கொண்டு காய்நகர்த்துகிறது தமிழக காங்கிரஸ்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal