நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் பல மாற்றங்கள் நிகழும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மா.செ.க்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாகவும், தொகுதியின் கள நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்களுடன் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட செயலாளர்களிடம் கள நிலவரம் என்ன என கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், திமுக தலைமை சார்பாக வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களிலும் தேர்தல் பணிகளை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருவதாகவும், 4000க்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுக்கு வந்திருக்கிறது என தெரிவித்தார்.

வருகிற 26 ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’என்ற தலைப்பில் வீடுவீடாகச் செல்லும் பரப்புரை ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறினார். அப்போது பாஜகவின் அநீதிகள், கழக அரசின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வலியுறுத்தியுனார். கட்சியில் அடிமட்டத் தொண்டர் வரையிலான அனைத்து விவரங்களும் தலைமைக்குத் தெரியும் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தலுக்குப் பிறகு பல மாற்றங்களை கழகத்திலும் அரசிலும் எதிர்பார்க்கலாம் என கூறினார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முதலமைச்சரின் பிறந்தநாள் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டம் நடத்த வேண்டாம் என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal