ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி, கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போதே மக்களவைக்கு போட்டியிடும் கடைசி தேர்தல் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 14ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சட்டசபை அலுவலகத்துக்கு சென்ற சோனியா காந்தி, அங்கு தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டியின்றி சோனியா காந்தி மாநிலங்களவைக்கு தேர்வானதை சட்டமன்ற செயலகம் முறைப்படி அறிவித்தது.

ஏற்கனவே 5 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்த சோனியா காந்தி முதல்முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வாகியுள்ளார். வரும் ஏப்ரல் 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal