தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் பார்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பார்களில் இரவு பகலாக பிளாக்கில் சரக்கு விற்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் கொலை, கொள்ளை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகம் நடப்பதால்தான், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி 2 வருடங்களுக்கு முன்பு முதற்கட்டமாக, ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் வீதம் மொத்தம் 3,000 கடைகளில் 6,000 கேமராக்களை பொருத்த தமிழக அரசு அனுமதியும் தந்திருந்தது.

அந்தவகையில், தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 4820 மதுக்கடைகளை நடத்தும் நிலையில், கொள்ளை சம்பவங்களை தடுக்க, 3,000 டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 500 கடைகளுக்கு கேமராக்கள் பொருத்த ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டிருப்பதாக, 3 மாதங்களுக்கு முன்பேயே தகவல் வெளியாகியிருந்தது.. இந்நிலையில், இதுகுறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும், சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கே புகார்கள் சென்றுவிட்டதாம். விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், இப்படியான புகார்கள் வந்ததுமே, திடீர் அதிரடியை கையில் எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சமயங்களில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக கேமராவை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு, டாஸ்மாக் நிறுவனத்திற்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது கூட உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்திருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal