வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 200 தொகுதிகளை தாண்டாது என்றும் செந்தில் பாலாஜிக்கு துணையாக நாங்கள் நிற்போம் என கோவையில் ஆவேசமாக பேசியிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பொருளாதாரத்தை ஈட்டி தரக்கூடிய மாவட்டமாக கோவை இருக்கிறது எனக்கூறிய அவர், ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசிடம் மாநில வளர்ச்சிக்காக நிதியை கேட்கும் பொழுதெல்லாம் நிதியை கொடுக்க மாட்டேன் என்கின்றனர். எங்களுக்கு ஓட்டு போடாத தமிழகத்திற்கு நிதி கிடையாது என கூறுவதாகவும் விமர்சித்தார்.

பாசிசம் அடிக்கும் அடி பயங்கரமாக இருக்கும் என அண்ணா சொல்லியிருக்கிறார், ஆனால் இன்று பாசிசம் சரிய ஆரம்பித்துவிட்டது, அதற்கு காரணம் நம்முடைய முதல்வர்தான் என தெரிவித்தார். 33 மாதங்களில் 1339 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்தது திராவிட மாடல் அரசு எனவும்,அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்பதை செய்து காட்டியவர் முதல்வர் ஸ்டாலின் எனவும், கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை நடந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

நாம் ஆன்மீகத்துக்கு எதிரானவர்கள் என்று நம்மை காட்ட பாசிசம் முயற்சிக்கிறது, அதை முறியடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பாஜகவிற்கு ஒத்து ஊத கூடிய கட்சியாக அதிமுக இருப்பதாக தெரிவித்தார். செந்தில் பாலாஜிக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம், திமுக தொண்டன் என்பதற்காக உங்கள் பின்னால் இருக்கிறோம், அந்த நம்பிக்கையோடு இருங்கள் எனவும் தெரிவித்தார்.

நாங்கள் சொன்னபடி 1000 ரூபாய் கொடுத்துவிட்டோம். ஆனால் 15 லட்சம் கொடுப்பேன் என்று 10 ஆண்டுக்கு முன்பு சொன்ன பாஜக கொடுத்தார்களா? ஏன் 15 லட்சம் கொடுக்கவில்லை என பா.ஜ.க வினர் வரும் போது கேளுங்கள் எனவும் தெரிவித்தார்.

2024 தேர்தல் என்பது இனி மாநில கட்சிகளுக்கு தேர்தல் இருக்குமா என்ற கேள்வியை எழுப்பக் கூடிய தேர்தல், அரசியல் அமைப்பு சட்டம் இருக்குமா என்று கேள்வி கேட்கக்கூடிய தேர்தல் எனவும் தெரிவித்தார். பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கூட பெறாது என நினைக்கிறேன் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவை பொதுக்கூட்டத்தில் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal