நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் தேர்தல் திருவிழா தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக தங்கள் கூட்டணி கட்சியோடு பிரதான கட்சி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ளது. ஆனால் அதிமுக மற்றும் பாஜகவானது இன்னும் கூட்டணியை இறுதி செய்யாத நிலையே உள்ளது.

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணி தொடர்ந்தது. இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து சந்தித்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவே ஏற்பட்டது. இதன் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதனையடுத்து இரண்டு கட்சிகளும் தங்கள் அணியை பலப்படுத்த கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இரண்டு கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதால் தங்களது தொகுதி தொடர்பான எதிர்பார்ப்பை பாமக, தேமுதிக அதிகரித்துள்ளது.குறிப்பாக பாமக 12 தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்பதாக கூறப்படுகிறது.

இதற்கு ஒரு படி மேல சென்ற தேமுதிக 14 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக தங்களால் இத்தனை தொகுதி தரமுடியாது என மறுத்துவிட்டதாக தெரிகிறது. குறிப்பாக தேமுதிகவிற்கு 4 மக்களவை தொகுதி வரை தர தயார் என அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்களவை சீட் தருவதற்கு வாய்ப்பு இல்லையென்றும் அதிமுக மற்றும் பாஜக உறுதியாக தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தேமுதிக இன்னமும் கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளது. இதனால் அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தை இழுபறி ஏற்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal