சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பி வந்தார். இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு சட்டமன்றத்தில் இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டருக்கிறது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்தனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க எடப்பாடி பழனிசாமி பல முறை வலியுறுத்தி வந்தார். சபாநாயகரிடமும் 4 முறைக்கு மேல் கடிதம் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மீண்டும் சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக பிரச்சனை எழுப்பப்பட்டது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை என்பது நீண்ட நாட்களாக உள்ள மரபு எனவும், பல ஆண்டுகளாக உள்ள மரபை சபாநாயகர் நிறைவேற்றி தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். மேலும் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக 4 முறை சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்திருப்பதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் நீண்ட நாட்களாக அவையில் வலியுறுத்தப்பட்டுவருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து ஆவணம் செய்ய வேண்டும் எனவும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்று ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் உள்ள எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்திருந்தார். தற்போது அந்த இடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இரண்டாம் வரிசையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. முதல் வரிசையில் எதிர்கட்சி தலைவர்கள் அமர்ந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்திற்கு முன்னாள் சபாநாயகர் தனபால் அருகில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் வரிசையில் 207வது ஏ இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இருக்கை 216 எண் ஏற்கனவே ஆர்.பி.உதயக்குமாருக்கு வழங்கப்பட்டது. தற்போது அந்த இருக்கை மனோஜ் பாண்டியனுக்கு‌ வழங்கபட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டது அதிமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி அவரை ‘குஷி’ப்படுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal