எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது, அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.

தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,

“சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும். 4 முறை சபாநாயகரை சந்தித்தும் பல முறை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்தும் கடிதங்களை வழங்கி இருக்கிறோம். எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபுப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை எதிர்க்கட்சி தலைவர் இருக்கை அருகே அமைக்க வேண்டும்,”என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பல முறை கோரிக்கை விடுத்து வருகிறார். இதற்கு முன்பாக இருந்த சட்டசபை தலைவர் தனபால் இருக்கை விவகாரத்தில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டாரோ, அதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தாங்களும் பலமுறை அவையில் தெரிவித்துள்ளீர்கள். எனினும் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்,என்று சபாநாயகர் அப்பாவுக்கு வலியுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு ஆர்.பி.உதயகுமார் புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அதிமுக தரப்பில் இது தொடர்பாகச் சபாநாயகருக்கும் கடிதம் தரப்பட்டுள்ளது. அதாவது இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு அருகிலேயே பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதால் அங்கே ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும், சட்டசபையில் இருக்கை ஒதுக்கீடு என்பது சபாநாயகரின் தனிப்பட்ட முடிவு என்றே சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியதை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார்.

சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் பேசியது திமுக, அதிமுக எம்எல்ஏக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal