அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசு முறைப்பயணமாக 27.1.2024 அன்று ஸ்பெயினுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், ஸ்பெயின் நாட்டின் முன்னணித் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசியதாகவும், இதையடுத்து பல தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசியதாகவும், இதையடுத்து பல தொழில் நிறுவனங்கள் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாகவும், பல நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு நேற்று பேட்டி அளித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் பயணத்தினால் தமிழகத்திற்கு மூன்று நிறுவனங்கள் மூலம் 3,440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவித்து உள்ளார். மேலும், பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். இருபது நாட்களுக்கு முன்பு, சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே. ஆனால் 20 நாட்கள்கூட முடியாத நிலையில், மீண்டும் முதலமைச்சர் ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது முதலீட்டை ஈர்க்கவா?  அல்லது முதலீடு செய்யவா?  என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்து உள்ளது.

இதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும். மேலும், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ள 3 நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் உள்ளதாகக்  கூறப்படும் நிலையில், ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.  எனவே, தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான  வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal