குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:- குடியரசுத் தலைவரின் உரை மாபெரும் உண்மைகளை சொல்லியது. நாடு எந்த வேகத்தில் வளர்ச்சி பெறுகிறதோ அதை குடியரசுத் தலைவர் உரை வெளிப்படுத்தி உள்ளது. 4 தூண்கள் பற்றி குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 4 தூண்கள் மூலம் நாடு வேகமாக வலுவடையும். பெண்கள், இளைஞர்கள், ஏழை எளியோர்கள், உழவர்கள் சக்தியே அந்த 4 தூண்கள்.

இந்தியா விடுதலை பெற்றபோது அதற்கு சாட்சியாக விளங்கிய இந்த செங்கோல் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. 10 ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது போல தற்போது பல ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளீர்கள். பாராளுமன்றத்தில் இருக்கவே  எதிர்க்கட்சிகள் தயங்குகின்றனர். எதிர்க்கட்சிகளில் சிலர் நாட்டை நிராசையில் தள்ளிவிட நினைத்தனர். புதிய பாராளுமன்ற நடைமுறைகளுக்கு செங்கோல் முன்நின்று வழிகாட்டுகிறது. மக்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம். காங்கிரசுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சியாக இருக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்களும் மேலே வரவில்லை, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள நல்ல தலைவர்களையும் மேலே வரவிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal