இந்தியாவின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதியை அனைத்து கட்சிகளுமே மிகவும் ஆவலாக எதிர் பார்த்து காத்திருக்கின்றன. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்ற நிலையில், அனைத்து கட்சிகளுமே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. எந்தெந்த தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது ? என்று பிரதான கட்சிகள், தங்களின் கூட்டணி கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன.

அதே நேரத்தில் எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று அனைத்து கட்சிகளும் ஆலோசித்து வருகிறது. கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ளார். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த முறையும் அவரே போட்டியிட உள்ளார். அவர் கடந்த தேர்தலில் வயநாடு மட்டுமின்றி உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார். அங்கு தோற்றுவிட்ட நிலையில், வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். இந்த முறை ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் மட்டுமே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal