தலைமை நீதிபதியின் முன் அனுமதி இல்லாமல் தானாக முன்வந்து தனி நீதிபதி வழக்கு பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை சமர்பித்துள்ளார்.

தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுவித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கேடஷன் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இதற்கு அமைச்சர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், கடந்த ஆண்டு அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை எனக்கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை தாமாக முன்வந்து வழக்கை பட்டியலிட்டு விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு தடைக்கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹச் ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வு ,அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று தான், தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரித்து வருகிறாரா. அல்லது தன்னிச்சையாக விசாரிக்கிறாரா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கையை வரும் ( பிப்ரவரி 5ஆம் தேதி) திங்கட்கிழமைக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் எம். ஜோதிராமன் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டின் முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு முன் அனுமதி கோரி தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அந்த கடிதத்தை 23.8.2023 அன்று பதிவாளர் அலுவலகம் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது.

அந்த கடிதத்தை 31.8.2023 அன்று தலைமை நீதிபதி பார்த்து விட்டார். ஆனால் அதே நேரத்தில் முன் அனுமதி கடிதத்தை தலைமை நீதிபதி பார்ப்பதற்கு முன்பாகவே தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது வழக்கின் விசாரணையை தொடங்கிவிட்டார் என பதிவாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal