‘நமது எதிரியை வீழ்த்த வேண்டுமானால் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை நடத்தியதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஜி.கே.வாசன். அப்போது, ‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேசினீர்களா?’ என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, ‘கூட்டணி குறித்து நான் ஒருவன் மட்டும் முடிவு செய்துவிட முடியாது. கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடிதான் முடிவு செய்யும். இது எனது தனிப்பட்ட சந்திப்பு! 15 நாட்களுக்கு முன்பு ஒருமுறை எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன். அதுவும் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியாது. எனது ஓட்டுநருக்கு மட்டுமே தெரியும்’’ என்றவர், அடுத்து சூசகமாக பதிலை தெரிவித்தார்.

அதாவது, ‘‘தேர்தல் சமயத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நலம் விசாரித்தேன் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரியை வீழ்த்த வேண்டுமானால், வலுவான கூட்டணி அமைய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் இணைந்து போட்டியிட வேண்டும்’’ என்று கூறியதாக சூசகமாகத் தெரிவித்தார் ஜி.கே.வாசன்!

எடப்பாடியார் & ஜி.கே.வாசன் சந்திப்பு குறித்து த.மா.கா மற்றும் பசுமை வழிச்சாலை வட்டாரத்தில் பேசினோம். ‘‘பா.ஜ.க.வை வீழ்த்தியாக வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் தலைமையில் ‘இண்டியா’ கூட்டணியை அமைத்தவரே பீகார் முதல்வர் நிதீஷ் குமார்தான். பி.ஜே.பி.க்கு எதிராக காங்கிரஸ் நடத்திய 3 கூட்டங்களிலும் கலந்து கொண்டார். அதன் பிறகு யாருக்கு எதிராக கூட்டணி ஒருங்கிணைப்பை நடத்தினாரோ, அவர்கள் (பா.ஜ.க.) கூட்டணியில் இணைந்தார் நிதீஷ்குமார். பி.ஜே.பி.யை கடுமையாக எதிர்க்கும் மம்தா, கெஜ்ரிவால் போன்றவர்களே காங்கிரஸை கழற்றி விட்டுவிட்டனர். (தமிழகத்தில்தான் காங்கிரஸை தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருக்கிறார் ‘தளபதி’)

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் கூட பா.ஜ.க. கணிசமான இடங்களைப் பிடிக்கும். வட மாநிலங்களில் தனிபெறும் மெஜாரிட்டியை மோடி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தலைமையில் மற்ற கட்சிகள் (பிரிந்து) இணைந்து போட்டியிட்டால், எதிர்க்கட்சியான தி.மு.க. மீண்டும் 39 இடங்களில் வெற்றி பெற்றுவிடும்.

எனவே, நமது எதிரியான தி.மு.க.வையும், காங்கிரஸையும் வீழ்த்த ஓரணியில் திரளவேண்டும். ‘ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம்’! எனவே, நாம பிரிந்து இருந்தால் யாருக்கு லாபம் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல’ என்று எடப்பாடியாரிடம் சில புள்ளி விபரங்களைக் கூறி தெரிவித்தாராம் ஜி.கே.வாசன்.

அ.தி.மு.க.வில் தற்போதைய நிலையில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் கூட இல்லை! எனவே, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை எடப்பாடியாருக்கு ஜி.கே.வாசன் சூசகமாக உணர்த்தியிருக்கிறார். எனவே, எடப்பாடி பழனிசாமி விரைவில் மனம் மாறினால், மாற்றம் ஏற்படும்… அந்த மாற்றம் ஏற்றமாக அமையும்’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal