தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:- ஆங்கிலேயர் அன்று செய்த அதே பிரிவினையை தி.மு.க.வும், காங்கிரசும் செய்து வருகிறது. வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்த்துள்ளது. சிறுபான்மையினரை பாதுகாக்கும் கட்சி என்று போலியாக கூறுகிறது. சிறுபான்மையினருக்கு தி.மு.க.-காங்கிரஸ் என்ன செய்தது? கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு பணிகளில் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தார்கள். தற்போது அது 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 31 சதவீத வீடுகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு உள்ளது. முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 36 சதவீதம் பேர் சிறுபான்மையினர். உஜ்வாலா திட்டத்தில் பயன் பெறுபவர்களில் 37 சதவீதம் பேர் சிறுபான்மையினர். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியை விட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளன. வருகிற பாராளுமன்ற தேர்தல் ஊழலற்ற மோடிக்கும் ஊழல் ஒன்றையே குறிக்கோளாக வைத்திருக்கும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கும் எதிரான தேர்தல். இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.