அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தி.மு.க. இளைஞரணியில் இரண்டாவது மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நாளை நடக்கிறது.

உதயநிதியின் உயிர் நண்பரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நடக்கும் மாநாட்டு திடலை இன்று நேரில் ஆய்வு செய்தார். பின் வரிசையில் இருப்பவர்களுக்கு மேடை தெரிகிறதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் இன்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு நாளை நடைபெறுவதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் திடல் உருவாக்கப்பட்டுள்ளது.

மாநாடுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரள்வார்கள் என்பதால் பந்தல், மேடை, நுழைவு வாயில்கள், கேட்டரிங் நடைபெறும் இடம், அமருமிடம், ஓய்விடம், கழிப்பறை, என ஒவ்வொரு இடத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டதோடு தேவையான இடங்களில் சில ஆல்டிரேஷன்களையும் கூறினார்.

குறிப்பாக மாநாட்டின் பந்தல் பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் மேடை தெளிவாக உள்ளதா என்பதையும், ஒலி, ஒளி அமைப்பு எப்படி செய்யப்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே கேட்டறிந்துக் கொண்டார். மாநாடு ஏற்பாடுகளை பந்தல் சிவா மேற்கொண்டிருந்ததால் பெரிதாக எந்த குறையும் இல்லை. இருப்பினும் ஓரு சில இடங்களில் மட்டும் சில மாற்றங்களை செய்யுமாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

அதே போல் பந்தல் குழு, பொது இருக்கை கண்காணிப்பு குழு, வாகன கட்டுப்பாட்டுக் குழு, நிதிக்குழு, பேச்சாளர் ஒருங்கிணைப்பு குழு, மேடை நிர்வாக குழு, உணவுக்கூடம் மற்றும் கடைகள் கண்காணிப்பு குழு, தீர்மானக் குழு, கழக முன்னணியினர் இருக்கை வசதி குழு, இந்தியா கூட்டணி தொடர்பு குழு, பொது பாதுகாப்புக் குழு, விளம்பரக் குழு, பத்திரிகை ஊடக ஒருங்கிணைப்பு குழு, மருத்துவக் குழு என திமுக இளைஞரணி மாநாடுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து குழுக்களின் பொறுப்பாளர்களை அழைத்து சில முக்கிய இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்களை கொடுத்தார்.

அதேபோல் சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ், அவருடனும் சில விஷயங்களை ஆலோசித்திருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal