தி.மு.க. இளைஞரணி மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், ‘பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்’ என அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான காலமே இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு அமைத்த கூட்டணியை வைத்தே நாடாளுமன்ற தேர்தலையும் திமுக எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அதிமுக நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். இந்நிலையில், அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசும்படி, மாவட்ட செயலாளர்களுக்கும், டிவி விவாதங்களில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஐடி விங் நிர்வாகிகளுக்கும் இபிஎஸ் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் பாமக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எதற்காக என்றால் திமுக கூட்டணியில் பாமக இணையும் பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறி அதிமுக பக்கம் வர வாய்ப்புள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொகுதி பங்கீட்டில் அதிருப்தி உருவாகும் பட்சத்தில் அணி மாறும் நிலை ஏற்படலாம்.

பாமக எடுக்க போகும் முடிவை பொறுத்து தான் அணி மாற்றத்திற்கு வழி கிடைக்கும். எனவே, அக்கட்சியின் முடிவு தெரியும் வரை திமுக – பாஜகவை தவிர, மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரித்துள்ள வலையில் பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் சிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal