தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டையொட்டி சென்னையில் உள்ள அண்ணா சாலையில் மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- “சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். 310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும். அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுப்போம்.

85 லட்சம் கையெழுத்துகள் நீட் தேர்வை விலக்க கோரி வாங்கி உள்ளோம். மாநாட்டின் போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம். பின்னர் நேரடியாக நானே குடியரசுத் தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறேன். ராமர் கோவில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால்தான் அதில் திமுக-விற்கு உடன்பாடு இல்லை” என்றார்.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:- “பாசிச இருளகற்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வெளிச்சத்தை தரவுள்ள நம் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டுத்திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-கலைஞரின் உருவச்சிலைகளுக்கு அருகே இன்று தொடங்கி வைத்தோம். இந்த சுடர், சென்னை-காஞ்சிபுரம்-விழுப்புரம்-கள்ளக்குறிச்சி-சேலம் மாவட்ட இளைஞர் அணி தோழர்களால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன் பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்பட உள்ளது.

சேலம் மாநாட்டுத்திடலில் வரும் ஜனவரி 20-ந் தேதி மாலை இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களால் என்னிடம் வழங்கப்படவுள்ள மாநாட்டுச் சுடரை, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்க உள்ளேன். கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம். இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம்-பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம்”. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal