தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன், சுந்தர் பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதனைத் தொடர்ந்து கவர்னர் ரெங்கநாதர் சந்நிதி, தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தாயார் சன்னதி அருகே உள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளது. காலணியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோவில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோவில் மட்டுமல்ல பொது இடங்களிலும், தனியார் இடங்களில் தூய்மை பேண வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து கவர்னர் ஆர்,என்.ரவி கார் மூலமாக மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.