ஆண்டு தோறும் பொங்கல் தொகுப்போடு ரொக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்தாண்டு பொங்கல் தொகுப்பு மட்டும் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தமிழர்களின் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் பச்சரிசி, முந்திரி, முழுக்கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். அந்த பொங்கல் தொகுப்போடு சேர்ந்து ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகை கடந்தாண்டு வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்தாண்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதி மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு நிதியானது ஒதுக்கவில்லை. இதனால் தமிழக அரசிடம் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில் தமிழர்திருநாள் தைப்பொங்கல் 2024 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் பட்சத்தில் தோராயமாக ரூ.238 கோடியே 92 லட்சத்து 72ஆயிரம் ரூபாய் செலவிடப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் பொங்கல் பரிசு தொகையாக ஆயிரம் ரூபாய்க்காண அறிவிப்பானது வெளியாகவில்லை. இதனையடுத்து அரசியல் கட்சிகள் சார்பாக பொங்கல் பரிசு தொகை 2000 முதல் 5000 ரூபாய் வரை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசு சார்பாக பொங்கலுக்கான ஆயிரம் ரூபாய் பரிசு தொகுப்பு தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சக்கரை, முழுக்கரும்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பரிசு தொகை ஆயிரம் ரூபாய் வழங்காத்து பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal