மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ்.ஷர்மிளா. தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான இவர், கடந்த 2021ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு மாநிலத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யாரும் இல்லை.

கடந்த ஒரு வருடமாக ஷர்மிளாவுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஷர்மிளா விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்றும் கூறப்பட்டது. செப்டம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார் ஷர்மிளா. ஆனால் அப்போது காங்கிரஸ் உடனான பேச்சு வார்த்தை எதிர்பார்த்தப்படி முடியாததால் அந்த பேரணியில் ஷர்மிளா பங்கேற்க முடியாமல் போனதாக கூறப்பட்டது.

தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது, கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சியின் ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார் ஷர்மிளா. மேலும் சட்டமன்ற தேர்தலின் போது கேசிஆரின் பிஆர் எஸ் கட்சிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் ஷர்மிளா மற்றும் அவரது கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தெலங்கானாவில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் ஒய்.எஸ். ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார்.

மேலும் தனது ஒய் எஸ் ஆர் தெலங்கானா கட்சியையும் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார் ஒய் எஸ் ஆர் ஷர்மிளா. காங்கிரஸ் கட்சியில் இணைந்த கையோடு பேசிய ஒய் எஸ் ஆர் ஷர்மிளா, இன்று, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி இன்று முதல் இந்திய தேசிய காங்கிரஸில் அங்கம் வகிக்கப் போவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றும் கூறினார்.

காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் ஆட்சி அமைத்துள்ள நிலையில் அடுத்து ஆந்திர மாநிலத்திற்குதான் குறி வைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒய் எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அண்ணன் – தங்கை நேரடி மோதலை உருவாக்கும் என கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal