பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதகாலம் இருப்பதால், கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றை கட்சியின் தலைமை ரகசியமாக முடிவு செய்திருக்கிறது.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆன பிறகு எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இன்னும் சொல்லப்போனால், எந்தவொரு அவப்பெயருக்கும் ஆட்படாத இளைஞர் பட்டாளத்தை களத்தில் இறக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார்.

இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதிலும் சொற்ப வக்குகள் வித்தியாசத்தில்தான் அ.தி.மு.க. தோல்வியுற்றது. தி.மு.க.வும் ஒட்டுமொத்தமாக ஒரு சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஆட்சியைப் பிடித்தது.

அந்த வகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல அறிமுகமான, அதே சமயம் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத நபர்களை தேர்வு செய்து களத்தில் இறக்க முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால், சீனியர்கள் பலருக்கு ‘கல்தா’தான் என்பது உறுதியாகிவிட்டது.

அ.தி.மு.க.வில் கூட்டணியே இன்னும் முடிவாகாத நிலையில், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு வேட்பாளர் யார் என்பதையும் முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள். கடந்த முறை மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார் மதுரை எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்தியன்.

இந்த முறை எப்படியும் எம்.பி.யாகிவிட வேண்டும் என காய் நகர்த்தி வருகிறார் ராஜ் சத்தியன். இவர், மதுரையில் ‘உள்குத்து’ நடக்கும் என்பதால் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதாக தகவல்கள் கசிகிறது. இந்த நிலையில்தான் திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிசாமியின் ‘குட்புக்’கில் இருப்பதால் மதுரை தொகுதியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், டாக்டர் சரவணன் போட்டியிடப் போவது மதுரையா? விருதுநகரா? என பட்டிமன்றமே நடக்கிறது. தி.மு.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவது உறுதியாக இருக்கிறது. இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். விருதுநகர் தொகுதியில் முக்குலத்தோர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அகமுடையார் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடியவர்கள். டாக்டர் சரவணன் அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் விருதுநகரில் இவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபம்.
இதற்கிடையே மதுரை தொகுதியில் போட்டியிட்டால், ‘உள்குத்து’ அதிகம் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் உள்குத்து காரணமாகத்தான் ராஜ் சத்தியன் தோல்வியைத் தழுவியது அ.தி.மு.க.வினருக்கே நன்றாகத் தெரியும். அதனால்தான், மதுரையில் போட்டியிட தயங்குவதற்கு காரணம்,அங்கு கோஷ்டி பூசல் அதிகம் என்கின்றனர்.

அதே போல் தென்காசி, நெல்லை ஆகிய தொகுதிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வருகிறது.’’ என்றனர்.

எனவே, எடப்பாடி பழனிசாமி யார் எந்தத் தொகுதியில் போட்டியிட்டால் அதிக வெற்றி வாய்ப்பு என்பதை அறிந்து, வேட்பாளர்களை களத்தில் இறக்கவேண்டும் என்பதுதான் நடுநிலையான ரத்தத்தின் ரத்தங்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal