தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் அரசு அறிவித்த பொருளாதார தகுதிப்பட்டியலுக்குள் வராததால் நிராகரிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில், முதற்கட்டமாக 7.35 லட்சம் பேர் பயனாளர்களாக இணைக்கப்பட்டனர். நவம்பர் மாதத்திலிருந்து அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கத் தொடங்கியது. இருப்பினும் இன்னும் சிலரது விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.  தற்போது உரிமைத்தொகை திட்டத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 ஆக உள்ளது.

இதில் தகுதியான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், கூடுதலாக 8  தாசில்தார், 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மேல்முறையீட்டு மனு மீது நடவடிக்கை எடுக்கவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal