பாஜக 2024 மக்களவைத் தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டினால், பாஜக கூட்டணியின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 400 ஐத் தொட்டுவிடும் என கணக்குப் போட்டி பிரதமர் மோடி காய் நகர்த்தி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து 2024 தேர்தலுக்கான கட்சியின் வியூகங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகளை மனதில் வைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர்களிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடந்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் என்ற நான்கு சாதிகளை மட்டுமே மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றார். அனைத்து தலைவர்களும் தேர்தலை முன்னிட்டு முழு மூச்சாக செயல்படுமாறும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் பங்கேற்றிருந்த பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கியை 10 சதவீதம் அதிகரிக்க வாக்குச்சாவடி வாரியாக பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, நமது திட்டங்கள் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களைச் சரியான முறையில் சென்றடைந்தால், அது நமக்கு உதவும் என்று கூறியிருக்கிறார்.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைக் கைப்பற்றிய பாஜக 2024 மக்களவைத் தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. பாஜக மட்டும் 350 இடங்கள் என்ற இலக்கை எட்டினால், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து, பாஜக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 400-ஐ எட்டிவிடும்.

2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போன 160 தொகுதிகளில் பாஜக சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்த 160 மக்களவைத் தொகுதிகளில் உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்தியாவில் உள்ள தொகுதிகளும் அடங்கும். குறிப்பாக, சோனியா காந்தியின் ரேபரேலி, அகிலேஷ் யாதவ் குடும்பத்தின் கோட்டையான மெயின்புரி மற்றும் சரத் பவார் குடும்பத்தின் கோட்டையான பாராமதி ஆகியவற்றையும் பாஜக குறிவைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் ‘இன்டியா’ கூட்டணியில் விரைவில் விரிசல் ஏற்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal