“ஹெலிகாப்டர் உதவி இருந்தால் மட்டுமே உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்க முடியும்” என தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் கிராம மக்களை மீட்பது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால், அம்மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. பலரும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதற்கான மீட்பு பணிகளை அரசு துரிதப்படுத்தியுள்ள நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜும் மீட்பு பணிகளில் கைகோத்துள்ளார். வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க கோரி நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார் மாரி செல்வராஜ்.
இதையடுத்து அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் களத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதனை உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “தாமிரபரணி ஆற்றின் கால்வாயின் கரையிலிருந்து வெளியேறிய தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் தூதுகுழி கிராமத்தில் நேரில் ஆய்வு செய்தோம். மேலும், அந்த கிராமத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் – உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிடவும் அதிகாரிகள் – – அலுவலர்களிடம் வலியுறுத்தினோம்” என தெரிவித்திருந்தார். தொடர்ந்து மாரி செல்வராஜும் தனது எக்ஸ் பதிவில் மீட்கப்பட்ட கிராமங்கள் குறித்த தகவலை நேற்று இரவு முதல் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “யாரும் எதிர்பார்க்காத மோசமான பேரிடராக இருக்கிறது. வயல் ஆற்றுப்பாசனம் சார்ந்த பகுதி இது. எல்லாமே தனித்தனி கிராமங்கள் என்பதால் அங்கு சென்று மக்களை மீட்பது சவாலாக உள்ளது. முடிந்த அளவுக்கு இரவெல்லாம் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தவிர, படகு செல்லவே முடியாத 15, 20 கிராமங்கள் உண்டு. அவர்கள் அங்கேயே 2 நாட்களாக உணவு, தொலை தொடர்பு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
எப்போதாவது அவர்களிடமிருந்து மெசேஜ் வரும். அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி.யிடம் பேசியுள்ளோம். ஹெலிகாப்டர் மூலமாக மீட்கலாம் என தெரிவித்துள்ளனர். அதனால், நம்பிக்கையில் உள்ளோம். ஹெலிகாப்டர் உதவி இருந்தால் மட்டுமே உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்க முடியும். மக்களுக்கு தண்ணீரிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளத் தெரியும். ஆனால், அது எவ்வளவு நேரம் என்பதுதான் கேள்வி” என்றார்.