கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சட்ட விரோதமாக கருக்கலைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. இதைதொடர்ந்து மாவட்ட நோடல் அதிகாரி டாக்டர் மஞ்சுநாத் கடந்த 5-ந் தேதி சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் நோய் கண்டறியும் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கீகரிக்கப்படாத அல்ட்ரா ஸ்கேனிங் எந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் மருத்துவமனையின் குப்பைத் தொட்டியில் பெண் கரு ஒன்று கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் இந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டில் சட்டவிரோதமாக 9 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நோடல் அதிகாரி டாக்டர் மஞ்சுநாத் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாலின நிர்ணயம் மற்றும் சட்ட விரோத கருக்கலைப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் 2 செவிலியர்கள், 1 லேப் டெக்னீஷியன் மற்றும் 1 துப்புரவு பணியாளர் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.