மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பிற்பகலில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தொலை தூரத்தில் உள்ள மாணவ, மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு வந்து வளாகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம்.
அதன்படி இன்று தேர்வுக்காக வளாகத்தில் உள்ள மரத்தடியில் மாணவ-மாணவிகள் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் பலத்த காற்று
வீசியது. மரக்கிளைகள் காய்ந்திருந்ததால் காற்றில் பலமாக ஆடியது. இதில் எதிர்பாராதவிதமாக மரம் முறிந்து படித்துக்கொண்டிருந்த மாணவ-மாணவிகள் மீது விழுந்தது. இதில் அவர்கள் கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு சிக்கியிருந்த மாணவ, மாணவிகளை மீட்டனர். மாணவிகள் விஜயா, விஷாலினி, மதுஸ்ரீ, இலக்கியா உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்தனர். இதில் 14 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.