மதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருகிற டிசம்பர் 29-ந்தேதியன்று திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, உட்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்ற ஒரு மாநாடாக இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த மாநாடு அடித்தளம் அமைப்பதாக அமையும் என்று நம்புகிறோம்.

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாக
அமையும். ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து சனாதன சக்திகளை வீழ்த்துகின்ற ஒரு தேர்தலாக இந்த தேர்தல் அமைகின்ற சூழலில் இந்த மாநாடு முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருக்கும். சென்னையில் புயலால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள முடியவில்லை. அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என்று அனைத்துக் கட்சிகளை சார்ந்தவர்களும் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

ரூ. 5 ஆயிரம் கோடி பேரிடர் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற தருணங்களில் மாநில அரசை விமர்சிப்பதை அ.தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகள் கைவிட வேண்டும் என்றார். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal