சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இருக்கும் அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால்அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவரை நுரையீரல் நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு முழுவதுமாக ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.