அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் சிறையில் இருக்கிறார். அடுத்தடுத்த அமைச்சர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் வந்திருப்பதுதான் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது வருமான வரித்துறை கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அந்த சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் அதே ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி கதிர் ஆனந்த் உறவினர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் ரூ.11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த விசாரணையின் முதற்கட்டமாக தற்போது அமலாக்கத்துறை வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் வரும் 28ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal