திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. அந்த ரெயில் இன்று காலை 8 மணியளவில் ஆவடி அருகே வரும் போது ஏ.சி. பெட்டியில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்தனர். ரெயில் நெமிலிச்சேரி நிலையத்தில் நிறுத்தப் பட்டது. தொழில் நுட்ப பணியாளர்கள் உடனே அந்த பெட்டிக்குள் சென்று மின்சார வினியோகத்தை துண்டித்தனர்.
இதற்கிடையே பெட்டியில் இருந்து புகை வந்ததை பார்த்த பயணிகள் ரெயில் நின்றதும் இறங்கி ஓடினார்கள். அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் தப்பி ஓடும் வகையில் உடமைகளை இறக்கினார்கள். ஏ.சி. பெட்டிக்கு வரக்கூடிய மின்சாரத்தில் ஏற்பட்ட கோளாறால் புகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் புகை வருவதை கண்ட பயணிகள் ரெயிலை நிறுத்தி மின்சார வினியோகத்தை துண்டித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரலுக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.