வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யை தோற்கடித்தே ஆகவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியை ஆரம்பித்தது. நடக்கவிருக்கின்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலிலேயே ‘இந்தியா’ கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருவதுதான், அக்கூட்டணிக் கட்சித் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது!

காங்கிரஸ் கட்சியால் ‘இண்டியா’ கூட்டணியின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் புகார் கூறியுள்ள நிலையில் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இரு தினங்களுக்கு முன் பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் கலந்துகொண்டு பேசும்போது “ஐந்து மாநில தேர்தலில் மட்டும் காங்கிரஸ் ஆர்வம் செலுத்தி வருவதால், இண்டியா கூட்டணியின் செயல்பாடு வேகம் பெறவில்லை. கூட்டணியின் வளர்ச்சியில் காங்கிரஸ் கவனம் செலுத்த தவறிவிட்டது” என்றார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், நிதிஷ் குமாரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. நிதிஷ் புகார் கூறிய அதே நாள் மாலையில் அவரது வீட்டுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் அனுப்பப்பட்டார். நிதிஷிடம் சுமார் 50 நிமிடங்கள் பேசிய பின் லாலு வீடு திரும்பினார். மறுநாள், காங்கிரஸ் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும் முதல்வர் நிதிஷின் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதில், பேசப்பட்ட விவரங்கள் வெளியில் தெரியவில்லை. எனினும் சில விளக்கங்கள் அளித்து நிதிஷ் குமாரை கார்கே சமாதானப்படுத்த முயன்றதாகத் தெரிகிறது.

மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆளும் பாஜகவை வரும் மக்களவை தேர்தலில் தோற்கடிக்க ‘இண்டியா’ கூட்டணி அமைக்கப்பட்டது. இதற்கு நிதிஷ் குமார் முதல் நபராக முயற்சி எடுத்து, அக்கூட்டணியை அமைத்தார். இக்கூட்டணி தலைவர்கள் கூட்டம் பாட்னா, பெங்களூரு மற்றும் மும்பையில் நடைபெற்றது. இதன் பிறகு வந்த ஐந்து மாநில தேர்தலில் கூட்டணியின் பிற உறுப்பினர்களிடம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி ஆகிய கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த 5 மாநில தேர்தல் என்பது மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படுகிறது. இச்சூழலில், ‘இண்டியா’ கூட்டணி தொடக்கத்திலேயே காணும் பின்னடைவுக்கு காங்கிரஸ் காரணமாகக் கருதப்படுகிறது.

இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், ‘இந்தியா’ கூட்டணி அமைவதற்கு முழுக்காரணமாக இருந்தவர்கள் இரு முதல்வர்கள்தான். ஒருவர் நிதீஷ்குமார், இன்னொருவர் மு.க.ஸ்டாலின்! காங்கிரஸ் கட்சிக்கூட பா.ஜ.க.விற்கு எதிராக இந்தளவிற்கு தீவிரமாக செயல்படவில்லை.

இந்த நிலையில்தான் நடக்கவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் தனது சுயரூபத்தைக் காட்டிவிட்டது. அதே போல், ஆம் ஆத்மி கட்சியும் ‘இந்தியா’ கூட்டணிக்கும், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டது.

தற்போது, இந்தியா கூட்டணியை உருவாக்க காரணமாக இருந்த நிதீஷ்குமாரே அதிருப்தியில் இருப்பால், நாடாளுமன்றத் தேர்தல் வரை ‘இந்தியா’ கூட்டணி நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதில் இன்னும் ‘பிரதமர்’ வேட்பாளர் யார் என்று முடிவு செய்யவில்லை. ‘இந்தியா’ கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பம், ஆளும் பா.ஜ.க.வை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal