தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவில் முக்கிய பிரமுகராக கருதப்படும் அமைச்சர் எ.வ.வேலு வின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம், அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் கோவை சிங்காநல்லூர் திமுக பகுதி செயலாளர் எஸ்.எம். சுவாமி இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது. மீனா ஜெயகுமார் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில் அவரது அலுவலகத்தில் எஸ்.எம். சுவாமி பணியாற்றி வருகிறார்.
மீனா ஜெயக்குமாரை அமைச்சர் எ.வ.வேலுவின் பினாமி என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளர் லிஸ்டில் மீனா ஜெயக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், அவரது பெயர் வேட்பாளர் பட்டியல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.