ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் (2014–& 19) இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகத்தில் சீமென்ஸ் நிறுவனம் மூலம் பொறியியல் கல்லூரிகள் உட்பட தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் ஆந்திர அரசு 10 சதவீதம் நிதி வழங்கியது. 10 சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ. 371 கோடி நிதியை சீமென்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதலின் பேரில் அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு வழங்கியது.

இதில் ரூ.118 கோடி ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கடந்த 2021ம் ஆண்டில் தற்போதைய ஜெகன் அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக சிஐடி போலீஸார் 2021ம் ஆண்டே வழக்குபதிவு செய்தனர். இது தொடர்பாக சிஐடி போலீஸார் சந்திரபாபு நாயுடுவை கடந்த மாதம் 9-ம் தேதி கைது செய்து விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீன் கோரி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal