ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி மற்றும்குருபூஜை விழா 3 நாட்கள் வெகுவிமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில் தற்போது 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான 28-ந் தேதி முத்துராமலிங்க தேவரின் ஆன்மீக விழா நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

அங்கு தமிழக அரசு சார்பில் தேவரின் புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான நேற்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவுகள் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. அவரது நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- தேவர் திருமகன் என அன்போடு அழைத்தவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணா. தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியவர் கருணாநிதி. பசும்பொன்னில் பொதுமக்கள் எளிதாக அஞ்சலி செலுத்த இரண்டு மண்டபங்கள். பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் ரூ.2.05 கோடி செலவில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

மீனவர்களை மீட்க திமுக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீவர்கள் பிரச்சனைகளை பேச மீனவ பிரதிநிதிகளோடு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு டெல்லி சென்றார். கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. கவர்னர் பாரதிய ஜனதா கட்சியாக மாறிவிட்டார், ஆளுநர் மாளிகையும் பாரதிய ஜனதா அலுவலகமாக மாறிவிட்டது. இதுதான் வெட்கக்கேடு. இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal