நாடாளுடன்றத் தேர்தல் நெருக்கத்தில் இருப்பதால், இந்தாண்டு பசும்பொன் தேவர் குரு பூஜைக்கு தமிழகம் முதற்கொண்டு டெல்லியில் இருந்து அரசியல் தலைவர்கள் வரவிருக்கின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் முதல்நாளே மதுரைக்கு சென்று தங்கி மறுநாள் மரியாதை செலுத்த இருக்கிறார். இந்த நிலையில்தான் ஓ.பன்னீரின் ஆதரவாளர்களால் எடப்பாடிக்கு எதிராக கோஷம் எழுந்துவிடக் கூடாது என்பதால் பத்தாயிரம் தொண்டர்கள் புடை சூழ பசும்பொன்னிற்கு எடப்பாடி பழனிசாமி வர ஆயத்தமாகி வருகிறார்.

ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள்.

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வரும் 30ஆம் தேதி பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார். ஆர்.பி.உதயகுமார் தான் இதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் கவனித்து வருகிறார். இதனிடையே எடப்பாடி பழனிசாமியின் பசும்பொன் விசிட்டிற்கு முக்குலத்டோர் சமுதாய அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது. அதனை சரிகட்டும் வேலையை தொடங்கியுள்ள ஆர்.பி. உதயகுமார், பாரதிய பார்வார்டு ப்ளாக் தலைவர் முருகன் ஜி மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அலைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து பசும்பொன் வரை அப் அண்ட் டவுன் அரணாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை தயார் செய்து வைத்துள்ள ஆர்.பி. உதயகுமார், எடப்பாடி பழனிசாமியின் பசும்பொன் விசிட்டின் போது சிறு சலசலப்பு கூட எழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். அதுமட்டுமல்ல மதுரை மாநாட்டை போல் எடப்பாடி பழனிசமியின் பசும்பொன் விசிட் மூலம் கட்சியிலும் ஸ்கோர் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமியை வரவேற்று ப்ளக்ஸ் பேனர்கள், விளம்பர தட்டிகள் என எதுவும் வைக்க வேண்டாம் என்பது வாய்மொழி உத்தரவாக கட்சி நிர்வாகிகளுக்கு போடப்பட்டுள்ளதாம். யாரேனும் ஏதேனும் ஒரு இடத்தில் ப்ளக்ஸ் பேனரை கிழித்தால் கூட அது ஊடகங்களில் ஃப்ளாஷ் ஆகி இமேஜை டேமேஜ் ஆக்கக் கூடும் எனக் கருதுகிறதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal