அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என பி.ஜே.பி. களத்தில் இறங்கி விளையாடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனல் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, ‘‘5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 5 மாநில தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள். பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது. அளித்த வாக்குறுதி எதையும் பாஜக நிறைவேற்றவில்லை.

ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். அந்த மாநிலங்களில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. மத்தியப் பிரதேசத்தில் பிரச்சினை உள்ளது. மத்தியப் பிரதேச மக்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு எதிராக உள்ளார்கள். எனவே, 5 மாநிலங்களிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனலாக இருக்குமா என கேட்கிறீர்கள். அவ்வாறு இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சினைகள் வெவ்வேறாக இருக்கின்றன. அதன் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் வித்தியாசமானது. உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் அனைத்திலும் தான் போட்டியிடுவதாகக் கருத வேண்டும் என வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுப்பார். அவர் என்ன முதல்வராக ஆகப் போகிறாரா? எனவே, உள்ளூர் அளவில் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய தலைவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகே, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் தொடங்கும்’’என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே ஜகா வாங்கியது பற்றி ‘மேலிடத்தில்’ உள்ள மூத்த கதர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பாகவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான ‘இந்தியா’ கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணியில் உள்ள சில கட்சிகளே மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துப் போகவில்லை. இந்த நிலையில்தான் கார்கே இப்படியொரு பதிலை அளித்திருக்கிறார். ஐந்துமாநில தேர்தல் முடிவுகள் வந்தபிறகு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ‘இந்தியா’ கூட்டணி இருக்குமா? என்பதே தெரியாது’’ என நம்டையே ஆச்சர்யப்படுத்தினர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal