சென்னையில் இன்று மாலை நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள விமான நிலையம் வந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரியங்கா ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த பெண் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இதனிடையே இன்று காலை முதலே சென்னையில் தங்கியுள்ள சோனியா காந்தியை பார்க்க தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் குவிந்துள்ளனர்.

திமுக மகளிர் உரிமை மாநாடு இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றிரவு சென்னை வந்த சோனியா காந்திக்கு விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் எழுச்சிமிகு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திற்கே நேரடியாக சென்று சோனியா காந்தியை வரவேற்றார்.

சோனியா காந்தி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு முதலில் திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள தயங்கியிருக்கிறார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி நடத்தப்படும் மகளிர் உரிமை மாநாடு என்பதாலும், கனிமொழியின் அழைப்பை நிராகரிக்க விரும்பாமலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இசைவு தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாநாட்டில் பங்கேற்க சென்னைக்கும் வந்துவிட்டார்.

இதனால் கனிமொழி எம்.பி., மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்நிலையில் சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் பெண் தலைவர்களுக்கு சென்னை ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் கனிமொழி இன்று மதிய விருந்து கொடுக்கிறார். அதில் தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகள் முதல் நேட்டிவ் ஸ்பெஷல் எனப்படும் ஒவ்வொரு ஊரிலும் பெயர் பெற்ற உணவு வகைகள் வரை இடம்பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் திருநெல்வேலி அல்வா, ஆம்பூர் பிரியாணி என எக்கச்சக்கமான உணவு வகைகள் கனிமொழி கொடுக்கும் விருந்து மெனுவில் இடம்பெற்றுள்ளன. சோனியா காந்திக்கு கனிமொழி கொடுக்கும் மதிய விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal