கல்வித் தந்தை… மருத்துக் குழுமங்களின் நிறுவனர்… அரசியல் வாதி… என பன்முகங்களைக் கொண்ட ஜெகத்ரட்சகன் வீட்டில் மூன்றாவது நாளாக வருமான வரித்தறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்!

எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர் ஜெகத்ரட்சகன். முதலில் அதிமுக சார்பில் எம்பியாக இருந்த அவர், அதன் பிறகு ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சி நடத்தி வந்தார். தொடர்ந்து 2009இல் அவர் திமுகவில் ஐக்கியமானார். தொடர்ந்து திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகவும் ஆனார். அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தது. நிலக்கரி சுரங்க முறைகேடு உள்ளிட்ட சர்ச்சைகளிலும் அவர் சிக்கி இருந்தார்.

ஏற்கனவே கடந்த 2020இல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.

இந்தச் சூழலில் தான் நேற்று முன்தினம் ஜெகத்ரட்சகனின் வீடு, மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை ஆரம்பித்தனர். மேலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் ரெய்டுகள் நடைபெற்றது. சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதற்கிடையே ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக இன்றும் ரெய்டு தொடர்ந்து நடைபெறுகிறது.

அதன்படி, சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் மற்றும் அடையாறு கஸ்தூரிபா நகர் முதலாவது பிரதான சாலை ஆகிய இடங்களில் அவரது வீடுகளில் ரெய்டு நடைபெறுகிறது. குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரேலா மருத்துவமனை, தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள ஆழ்வார் ஆய்வு மையம் அலுவலகம், உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். லட்சுமிபுரம் ஜெகத்ரட்சகனின் உறவினர் தாம்பரம் துணை மேயர் காமராஜ் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன் இந்த ரெய்டுகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு சவிதா மருத்துவமனையில் சோதனை நடந்த நிலையில், அது நிறைவடைந்துள்ளது. இருப்பினும், அங்கே பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இரண்டாவது நாளான நேற்று பணம் எண்ணும் இயந்திரங்களும் ரெய்டு நடக்கும் இடங்களில் கொண்டு செல்லப்பட்டன. மேலும், ரகசிய அறைகள் எதாவது இருக்கிறதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர். இதனிடையே திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் இன்று 3ஆவது நாளாக ஐடி ரெய்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எப்போதுமே தேர்தல் களத்தில் ‘விட்டமின்களை’ இறக்குவதில் ‘ஜெகஜால’ ஜெகத்துக்கு வருமான வரித்துறை வைத்த செக்தான், அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal