கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பா.ஜ.க.வை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த முடிவை கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அது தொண்டர்களின் உணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் எங்கள் நிலைப்பாடு குறித்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இந்த முடிவு நாடகம் என்று சொல்கிறார்கள். அதனை முடிவுக்கு கொண்டு வர இந்த சந்திப்பு. தேர்தல் வரும்போது உண்மைத் தெரியும் என்று எங்கள் முடிவு குறித்து விமர்ச்னம் செய்கிறார்கள்.

தேர்தல் பயத்தின் காரணமாக இவ்வாறு அவர்கள் பேசுகிறார்கள். அண்ணா குறித்து விமர்சனம் வைக்கப்படும்போது அவரின் பெயரை கட்சியின் பெயராக வைத்து இருக்கும் இயக்கத்தால் எப்படி அதனை சகித்துக் கொள்ள முடியும். தேசிய கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுகிறது. 2024 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். அண்ணா குறுகிய காலத்தில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர்.

நாங்கள் ஒரு போதும் ஒரு கட்சியின் மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூற மாட்டோம். அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒரு போதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது. தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்து உள்ளனர். மிசாவை கொண்டு வந்தவர் இந்திராகாந்தி அப்போது சிறை சென்று வந்த ஸ்டாலினை மிசா வீரன் என்றார்கள்.

காங்கிரசை முன்னாள் முதல்வர் கருணாநிதியும், ஸ்டாலினும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அவர்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளார்கள். 2026ம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்போம். நாங்கள் மக்கள் பிரச்சனையை வைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம். அ.தி.மு.க.வின் குரல் மக்களுக்காக ஒலிக்கும் திராவிட மாடலை உருவாக்கிவர் அண்ணா என்பதை ஸ்டாலின் மறந்து விட்டு பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal