சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (32). இவர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 13-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் ரத்தநாள அடைப்புக்கான அறிகுறி இருந்ததால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தனர். அப்போது, நுண்துளை மூலமாக வலது கை மற்றும் கால்களில் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ரத்த உறைதல் காரணமாக ஜோதியின் வலது கை மற்றும் 2 கால்களும் கருப்பு நிறத்தில் மிகவும் மோசமாக மாறியது. இதனால் ஜோதியின் உயிரை காப்பாற்ற நேற்று முன்தினம் அவரது வலது கையை டாக்டர்கள் அகற்றினர். மேலும், டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் ஜோதியின் வலது கால் காப்பாற்றப்பட்டது. இந்தநிலையில் ஜோதியின் இடது கால் கருப்பு நிறமாக மாறியது. இடது காலை பாதுகாக்க டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக ஜோதியின் கணவர் ஜீனத் கூறியதாவது:- மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறி இருப்பதால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தனியார் ஆஸ்பத்திரியில் கூறினார்கள்.

ஆஞ்சியோ பரிசோதனை செய்ய போதுமான பணம் இல்லாததால் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக வந்தோம். சிகிச்சைக்கு பின் ரத்தநாள அடைப்புகள் பாதிப்பு இல்லை என தெரிவித்தனர். ஆனால் ரத்த உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக கூறி கை மற்றும் கால்களில் உள்ள சதைகளை வெட்டி எடுத்துள்ளனர். பின்னர் உயிரைக்காப்பாற்ற வேண்டும் என்றால் வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறினார்கள். இதய பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தோம்.

இப்போது, என் மனைவியின் கையை எடுத்துவிட்டார்கள். என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? எதற்காக ரத்த உறைதல் ஏற்பட்டது? என்பது குறித்து எதுவும் எனக்கு தெரியவில்லை. டாக்டர்களின் தவறான சிகிச்சையால் இது நடந்ததா? என எனது மனைவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகார் குறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் தேரணிராஜன் கூறியதாவது:- நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜோதிக்கு 2 நாட்கள் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின், ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடா்ந்து அவரது கையில் வீக்கம் ஏற்பட்டதால் அதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ரத்தநாள அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இல்லாத நிலையில், ரத்த உறைதல் நோயால்தான் நெஞ்சுவலி ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

ரத்த உறைதலால் வலது கை செயலிழந்து விட்டது, அதனால் முழங்கைக்கு மேல் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது, இதயவியல், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து ஜோதியை கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1½ வயது குழந்தையின் கை அகற்றப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal