தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கருத்தரங்குக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் டி.ஏ. நவீன் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். நாடு சுதந்திரம் கிடைத்த பிறகு கல்வி, வேலைவாய்ப்பில் எல்லா சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரியாரும், காமராஜரும் வலியுறுத்தினார்கள். அதன் நியாயத்தை உணர்ந்து முதல் முதலில் அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வந்தவர் நேரு. இப்போதும் சாதி வாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அனைத்து சமூகங்களும் கல்வி, வேலைவாய்ப்புகளில் சம உரிமை பெறும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பிற்பட்டோர் பிரிவு மாநில துணை தலைவர்கள் துறைமுகம் ரவிராஜ், தீபன்பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் டி.கே.கண்ணன், செயலாளர் அருள்பிரசாத், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal