தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள், வைரஸ்கள், நுண்ணுயிரிகள் மூலம் பல்வேறு தொற்றுகள் பரவி வருகின்றன. குழந்தைகளும் அத்தகைய நோய்களால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சல், உடல்வலி தொண்டை வலி, சளி, இருமல், மூச்சு திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்கான சிகிச்சை கட்டமைப்புகளை விரிவுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொசு உற்பத்திக்கு வழி வகுக்கும் தனி நபர்கள், நில உரிமையாளர்கள், நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பதற்கான அறிவிப்பை பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மழை காரணமாக தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புகளும், குறிப்பாக டெங்கு காய்ச்சலும் அதிகமாக பரவி வருகிறது.

ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் தமிழக பொது சுகாதார விதிகளின்படி அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக உள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு உரிய விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும்.

அதே போன்று கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், நில உரிமையாளர்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறலின் தன்மையை பொருத்து அவர்களுக்கு ரூ.500 வரை ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal