சனாதனத்தை ஒழிப்பேன் என கூறிய என் தலைக்கு 10 கோடி என்றால், சனாதனத்தை ஒழிச்சாச்சுனு சொன்ன செல்லூர் ராஜூ தலைக்கு எத்தனை கோடி நிர்ணயிப்பார்கள் என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதி அருகில் இருக்கக்கூடிய மதுரை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1,001 மூத்த திமுக உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, மதுரை மக்கள் அன்புக்கும், வீரத்துக்கும் பெயர் போனவர்கள், மதுரையில் தான் திமுகவின் இளைஞரணி தொடங்கப்பட்டதாக கூறினார்.

திமுக ஆட்சிகாலத்தில் மதுரைக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக கூறினார். உயர்நீதிமன்றம், சர்வதேச விமான நிலையம் என மதுரைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர், கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிகட்டு மைதானத்தை கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின் என தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடி ஒன்பது ஆண்டுகளில் நாட்டிற்காக என்னத்தை செய்து உள்ளார் என தெரியவில்லை. சாலை, காப்பீடு என அனைத்திலும் பாஜக அரசு ஊழல் செய்துள்ளதாகவும் விமர்சித்தார். பாஜக அரசால் வாழும் ஒரே குடும்பம் அதானி குடும்பம் மட்டுமே அதானிக்காக பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சனாதான ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை பற்றி நான்பேசியது ஐந்து நிமிடம் தான், ஆனால் நான் பேசாததை பேசியதாக சொல்லி, பொய் சொல்லி பரப்பி அதை பூதாகரமாக்கி நாடு முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் பேசுகிறார்கள். என் மீது பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள். என தலைக்கு 10 லட்சத்தில் விலை தொடங்கி 10 கோடி வரை நிர்ணயித்தார்கள். தலையை சீவினால் 10 கோடி தருவதாக ஒரு சாமியார் தெரிவித்தார். இதனையடுத்து சனாதனம் தொடர்பாக அதிமுக தலைவர்களிடம் கருத்து கேளுங்கள் என தெரிவித்தேன்.

அதற்கு செல்லூர் ராஜூ, சாமியாருக்கு கோவம் வரும் அளவிற்கு உதயநிதி பேசிவிட்டார் என கூறியிருந்தார். இருந்து போதும் தொடர்ந்து அண்ணா பெயரில் கட்சியை வைத்திருக்கும் நீங்கள் சனாதனத்தை பற்றி கூறுங்கள் என கேட்ட போது அதற்கு செல்லூர் ராஜூ, தற்போது வாயை திறந்து சனாதனத்தை பற்றி தெரிவித்துள்ளார். அதில் ஏற்கனவே சனாதனத்தை ஒழித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என கூறியுள்ளார்.

நானாவது ஒழிப்பேன் என தெரிவித்தேன். ஆனால் செல்லூர் ராஜூ சனாதனத்தை ஒழித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார். இதனை அவருடைய ஓனர் அமித்ஷா மற்றும் மோடியிடம் தைரியமாக கூற முடியுமா என கேட்டவர், சனாதனத்தை ஒழிப்பேன் என கூறிய என் தலைக்கு 10 கோடி என்றால், சனாதனத்தை ஒழிச்சாச்சுனு சொன்ன செல்லூர் ராஜூ தலைக்கு எத்தனை கோடி என உதயநிதி கேள்வி எழுப்பினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal