நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது ஐந்து வழக்குகள் பதிவாகியிருந்தது. இந்த நிலையில்தான் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் தற்போது வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நடிகை விஜயலட்சுமி, சீமான் தம்மை ஏமாற்றியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் சென்னை போலீசில் புகார் கொடுத்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். மேலும் திருவள்ளூர் மாஜிஸ்திரேட், விஜயலட்சுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

மேலும் சீமான் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் எனவும் விஜயலட்சுமி புகார் தெரிவித்திருந்தார். இதனை உறுதி செய்யவும் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து சீமானை போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமானை கடந்த 9-ந் தேதி காவல்நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் கட்சிப் பணிகள் இருப்பதாக கூறி அன்றைய தினம் சீமான் ஆஜராகவில்லை. இதனிடையே சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று விசாரணைக்காக சீமான் ஆஜராக இருக்கிறார்.

சீமான் மீது விஜயலட்சுமி புகாரின் அடிப்படையில் ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது 6-வதாக மேலும் ஒரு பிரிவின் கீழ் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளும் சீமான் மீது பாய்ந்திருக்கிறது. இதனால் விசாரணைக்கு ஆஜராகும் சீமான், கைது செய்யப்படலாம் என்ற நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal