மாரிமுத்து வரும் போதே பல்ஸ் ரொம்ப மோசமாக இருந்தது, இதய நோயாளிகளுக்கான அந்த கோல்டன் ஹவர்சை அவர் தவறவிட்டுவிட்டார் என்று மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பேட்டி அளித்துள்ளார்.

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை டப்பிங் பேசி உள்ளார். தொடர்ந்து இரண்டு மணி நேரம் டப்பிங் பேசிய அவருக்கு வியர்த்துள்ளது. இதையடுத்து டப்பிங் ஸ்டூடியோவில் இருந்து வந்த மாரிமுத்து காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே அவரது உயிர் பிரிந்தது.

இந்நிலையில், மாரிமுத்துவுக்கு கடைசியாக சிகிச்சை அளித்த வடபழனி சூர்யா மருத்துவமனையின் பிரபலமான மருத்துவர் டாக்டர் ஆனந்தகுமார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ‘‘திடீர் என்று மாரடைப்பு ஏற்படாது, ஏதாவது ஒரு சிம்ப்டம் காட்டி இருக்கும், அதை மாரிமுத்து அலட்சியமாக எடுத்துக்கொண்டார். இதுபோன்ற நேரத்தில் நல்ல காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும், உடனே மருத்துவர்களை சந்திக்க வேண்டும்.

ஆனால், அந்த நேரத்தில் மாரிமுத்துவே காரை ஓட்டிக்கொண்டு வந்தது பெரிய தப்பு, யாரையாவது உதவிக்கு அழைத்து இருக்கலாம். இந்த நேரத்தைத்தான் கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்லுவோம் இந்த நேரத்தை அவர் தவறவிட்டுவிட்டார். மருத்துவமனைக்கு வந்த அவரால், காரில் இருந்து இறங்க முடியவில்லை.

மருத்துவமனை ஊழியர்கள், அவரை கீழே இறக்க முயற்சித்த போது, நெஞ்சை பிடித்துக் அவர்கள் மீது அவர் அப்படியே சாய்ந்துவிட்டார். உடனே அவருக்கு சிபிஆர் சிகிச்சையை தொடங்கினோம். மசாஜ், வென்டிலேஷன் ஆகியவற்றையும் முயற்சித்தோம். 15 முதல் 20 நிமிடம் எப்படியாவது அவரை மீட்டுவிடலாம் என்று போராடினேன். ஆனால் அவர் வரும் போதே பிபி, பல்ஸ் இரண்டுமே இல்லாததால், எந்தவிதமான சிகிச்சையும் பயன் அளிக்கவில்லை’’ என்று மருத்துவர் ஆனந்தகுமார் கூறினார்.

வடபழனி சூர்யா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் ஆனந்தகுமார், மருத்துவமனைக்கு ‘கிரிடிக்கல் பொசிசனில்’ வரும் நோயாளிகள் பலரையும் காப்பாற்றியிருக்கிறார். ஆனால், மாரிமுத்துவை காப்பாற்ற முடியாமல் போனது, மாரிமுத்துவின் துரதிர்ஷ்டமே!

மதியைவிட விதி வலியது..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal