ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நாரா லோகேஷ் யுவகலம் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரம் மண்டலம், தாடேரு என்ற இடத்தில் லோகேஷ் மற்றும் தொண்டர்கள் நேற்று பாதயாத்திரையாக நடந்து சென்றனர். அப்போது பாதயாத்திரை சென்ற சாலைகளில் கற்கள் மற்றும் கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

பாதயாத்திரை சென்ற இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் லோகேஷை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர். பேனர்களை அகற்றும் படி போலீசார் தெலுங்கு தேசம் தொண்டர்களிடம் தெரிவித்தனர். இதனால் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை கிழித்தனர். மேலும் அங்குள்ள கட்டிட மாடிகளில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களது கட்சி கொடியை காண்பித்தபடி பாதயாத்திரையில் கற்கள் மற்றும் கம்புகளை சரமாரியாக வீசி தாக்கினர்.

இந்த தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமராஜு, தொண்டர்கள் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர். பாதயாத்திரையில் சென்ற வாகனங்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

போலீசார் அனுமதி வழங்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பாதையாத்திரை சென்றதாகவும் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி பாதயாத்திரையை அப்பகுதியிலேயே நிறுத்தினர். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal