தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக போலீசிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார். சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
இதைதொடர்ந்து, தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் தலைவர் வீரலட்சுமியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சென்று சீமான் மீது 4 பக்கத்தில் பரபரப்பு புகார் மனு அளித்தார். இந்நிலையில், சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விஜயலட்சுமியிடம் சீமான் மீதான புகார் குறித்து 6 மணி நேரத்திற்கும் மேலாக துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தினார். காவல் நிலையத்தைவிட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியேற மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.